‘ராஜபுத்திரன்’ திரை விமர்சனம் | ‘Rajaputhiran’ movie review in Tamil

சென்னை,
ஊர் மக்கள் மதிக்கும் பெரிய மனிதராக வலம் வரும் பிரபு, மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். விவசாய தொழில் மீதான நம்பிக்கையால் மகனை வேலைக்கு அனுப்பாமல் இருக்கிறார். ஒருகட்டத்தில் குடும்ப சூழ்நிலை கருதி, தந்தைக்கு தெரியாமல் ஒரு கும்பலிடம் வேலைக்கு சேருகிறார் வெற்றி.
வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தை அவர்களது குடும்பத்தினரிடம் சென்று சேர்க்கும் வேலை அது. இதில் கருப்பு பணம் சட்ட விரோதமாக மாற்றப்படுகிறது. திடீரென மிகப்பெரிய பிரச்சினையில் வெற்றி சிக்கிக்கொள்ள, அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இந்த விவகாரம் பிரபுவுக்கு தெரியவர, அதன்பிறகு என்ன ஆனது? என்பதே படத்தின் கதை.
இயல்பான நடிப்பை காட்டி கவரும் வெற்றி, சண்டை காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளார். தந்தை பாசத்தில் உருகும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். கணீர் குரலும், கம்பீர தோற்றமும் என பிரபு அசத்துகிறார். அவரது அனுபவ நடிப்பு படத்தை தாங்கி பிடிக்கிறது. நாயகியாக வரும் கிருஷ்ணபிரியா அலட்டல் இல்லாத நடிப்பால் ஈர்க்கிறார்.
இமான் அண்ணாச்சி, தங்கதுரை கூட்டணியின் காமெடி ஓ.கே. ரகம். கோமல்குமாரின் வில்லத்தனம் ரசிக்க வைத்தாலும் ‘பில்டப்’ கொஞ்சம் குறைத்திருக்கலாம். லிவிங்ஸ்டன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான் ஆகியோரும் நடிப்பில் எதார்த்தம் கூட்டுகிறார்கள்.
ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவும், நவுபல் ராஜாவின் இசையும் படத்துக்கு வலு சேர்க்கிறது. திருப்பங்கள் கொண்ட திரைக்கதை பலம். லாஜிக் மீறல்கள் பலவீனம். தந்தை-மகன் பாசத்தை ஆக்ஷன், காதல், நகைச்சுவை இணைத்து ரசிக்கும்படி கதை சொல்லி கவனிக்க வைக்கிறார், இயக்குனர் மகா கந்தன்.
ராஜபுத்திரன் – ‘ஓவர்’ பாசம்.