ரவி மோகனுடன் கல்யாணி கவர்ச்சி நடனம்.. ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை,
கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான படம் லோகா அத்தியாயம் 1 சந்திரா. படம் திரைக்கு வந்து சர்வதேச அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து தென்னிந்தியாவின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் உருவெடுத்துள்ளார். படத்தில் சூப்பர் ஹீரோயினாக நடித்த கல்யாணி பிரியதர்ஷன் ஆக்சன் காட்சிகளில் அதிரவிட்டு இருந்தார்.
கதாநாயகியை மையமாக கொண்டு வெளியான இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை தேடி தந்தது. இந்த மகத்தான வெற்றிக்கு காரணமான கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரவி மோகனுடன் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வரும் ஜீனி படத்தின் பாடலான “அப்தி அப்தி” பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இந்த பாடலுக்கு ரவி மோகனுடன் கல்யாணி பிரியதர்ஷன், கிருத்தி ஷெட்டி ஆகியோர் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தனர்.
கல்யாணியின் கவர்ச்சி தோற்றத்திற்கு மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பக்கத்து வீட்டு பெண் இமேஜுடன் இருந்த கல்யாணி பிரியதர்ஷன் இது போன்ற தோற்றங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். கல்யாணி கவர்ச்சியான கதாபாத்திரங்களை தேடிச் செல்வதற்கு பதிலாக சாய்பல்லவி போல நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.