ரஜினியின் “கூலி” திரைப்படத்துக்கு “யு/ஏ” சான்று கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘கூலி’ திரைப்படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் கூலி திரைப்படத்தை ‘யு/ஏ’ சான்றிதழுடன் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
‘கூலி’ திரைப்படத்தை ‘யு/ஏ’ சான்றிதழுடன் திரையிட அனுமதி கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி தமிழ் செல்வி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், எந்த தமிழ் படங்களிலும் அதிகப்படியான சண்டை காட்சிகள் இல்லாத படங்களை பார்க்க முடியாது. மோசமான வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. மது காட்சிகள் மறைக்கப்பட்டுள்ளன. சென்சார் போர்டு தெரிவித்த நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன என வாதிட்டார்.
சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஏ சான்றிதழை முதலில் ஏற்றுக் கொண்ட படக்குழு தற்போது யு/ஏ சான்றிதழ் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளது. படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்குவது தொடர்பாக அனைத்து குழுக்களும் சேர்ந்து ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. வன்முறை காட்சிகளை நீக்கி விட்டு, யு/ஏ சான்று கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.