யார் காரணம் ? நடிகர் ரவி மோகன் மாமியார் விளக்கம்|Who is to blame? Actor Ravi Mohan’s mother-in-law explains |

யார் காரணம் ? நடிகர் ரவி மோகன் மாமியார் விளக்கம்|Who is to blame? Actor Ravi Mohan’s mother-in-law explains |



சென்னை,

நடிகர் ரவிமோகன்-ஆர்த்தி தம்பதியரின் பிரிவும், பாடகி கெனிஷாவை ‘என்னுடைய வாழ்வில் ஒளியாக வந்தவர்’ என்று ரவிமோகன் சொன்னதும் பரபரப்பு விஷயமாக பேசப்பட்டு வருகிறது.

‘ஒரு தந்தையாக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்’ என்று ஆர்த்தியும், அவருக்கு பதில் அளித்து ‘நான் பொன் முட்டையிடும் வாத்தாக நடத்தப்பட்டேன். முன்னாள் மனைவியும், அவரது குடும்பத்தினரும் என்னை அவர்களின் கடனுக்கு ஜாமீன் போட வைத்தனர்’ என்று ரவிமோகனும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டனர்.

இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளரும், ரவிமோகனின் மாமியாருமான சுஜாதா விஜயகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 25 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் தயாரிப்பாளராக இருக்கிறேன். சமீபகாலமாக என் மீது எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு காலமும் என்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் கருதி மவுனமாக இருந்தேன். ஆனால் கொடுமைக்காரி, குடும்பத்தை பிரித்தவள், பணப்பேய், சொத்தை அபகரித்தவள் என்று என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லவில்லை என்றால், அந்த பொய்கள் உண்மையாகிவிடும்.

‘வீராப்பு’ என்ற படத்தை தயாரித்த பிறகு, சின்னத்திரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். 2017-ம் ஆண்டு என் மாப்பிள்ளை ஜெயம் ரவிதான் (ரவி மோகன்), ‘நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும்’ என்று கூறினார். அதனால் மீண்டும் திரைப்படம் தயாரிக்க முன்வந்தேன்.

அந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘அடங்க மறு’ திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றாலும், வணிக ரீதியாக வெற்றி அடையவில்லை. இருந்தாலும் ஜெயம் ரவியால் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். அவரை வைத்து நான் எடுத்த மூன்று படங்களுக்காக சுமார் ரூ.100 கோடிக்கும் மேலாக கடன் வாங்கி இருக்கிறேன். அந்த பணத்தில் 25 சதவீதத்தை ஜெயம் ரவிக்கு ஊதியமாக வழங்கி உள்ளேன். இதற்கு என்னிடத்தில் ஆதாரங்கள் உள்ளன.

என்னுடைய கடனுக்காக, நான் என் மாப்பிள்ளை ஜெயம் ரவியை பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில் துளியும் உண்மை இல்லை. அவரை என் மாப்பிள்ளை என்பதைத் தாண்டி, சொந்த மகனாக கருதினேன். அதனால் பைனான்சியர்கள் நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு, பல கோடி ரூபாய் நஷ்டத்தையும், மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக்கொண்டேன். அதற்கான வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன்.

‘சைரன்’ பட வெளியீட்டின்போது கூட, நஷ்டத்தை ஈடுகட்ட எனக்கு அடுத்த படம் நடித்து கொடுப்பதாகத்தான் ஜெயம் ரவி கடிதம் கொடுத்தாரே தவிர, எங்கேயும் எப்போதும் கடனுக்கு பொறுப்பேற்று கட்டுவதாக யாருக்கும் கையெழுத்து போடவில்லை. கடந்த ஒரு வருடமாக நான் பலமுறை முயற்சி செய்தும், எங்களை சந்திப்பதை ஜெயம் ரவி தவிர்த்து வந்தார்.

அவரை சந்தித்து பேசி குடும்பத்திற்குள் சமாதானத்தை எட்டலாம் என்று நினைத்துதான், ஒரு தயாரிப்பாளராக அல்ல… ஒரு தாயாக 10 நாட்களுக்கு முன்பு அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். மாறாக அவர் சொன்னதுபோல அவரை நிர்ப்பந்தப்படுத்த அல்ல. ஜெயம்ரவி சொன்னது போல கோடிக்கணக்கான ரூபாய்க்கு அல்ல, ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை வைத்திருந்தால் கூட அதை வெளியிடட்டும்.

எப்போதும் உங்களை கதாநாயகன் பிம்பத்திலேயே நாங்கள் பார்க்கிறோம், ரசிக்கிறோம். நடந்து வரும் பிரச்சினையில் உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நீங்கள் சொல்லும் பொய்கள், உங்களை தரம் தாழ்த்தி விடுகிறது.

இன்றுவரை பேரப்பிள்ளைகளுக்காக என் மகளும், மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம், ஒரு தாய்க்குத்தான் தெரியும். ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு, மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்ரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள். அதைத் தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *