”யாரும் அதை நம்ப வேண்டாம்…அது போலி”

சென்னை,
செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது ஒவ்வொரு துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. சிலர் இதை தவறாகவும் பயன்படுத்துகின்றனர். அவர்கள் போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் வைரலாக்குகிறார்கள்.
திரைப்பட நட்சத்திரங்கள் விஷயத்திலும் இதே போன்ற விஷயங்கள் நடக்கின்றன. சமீபத்தில், பாலிவுட் நடிகர் அக்சய் குமார் பற்றிய ஒரு போலி வீடியோ இணையத்தில் வைரலானது. அவர் வால்மீகி மகரிஷி வேடத்தில் நடிப்பதாக ஒரு போலி வீடியோ வெளியானது.
இதை பலர் உண்மையானது என்று நம்பினர். இந்த வீடியோ வைரலானநிலையில், அக்சய் குமார் அதற்கு பதிலளித்துள்ளார். டிரெய்லர் போலியானது என்றும்..யாரும் அதை நம்ப வேண்டாம் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மகரிஷி வால்மீகி வேடத்தில் நான் படத்தில் நடிக்கிறேன் என்று ஒரு போலி ஏஐ வீடியோ வைரலாகி வருகிறது. இதை நம்பாதீர்கள். இதில், வருத்தம் என்னவென்றால், சில செய்தி சேனல்கள் அந்த வீடியோக்களை உண்மையானவை என்று நினைத்து செய்திகளை வெளியிடுகின்றன.
குறைந்தபட்சம் அதை வெளியிடும் முன்பு, உண்மையானவையா? அல்லது மார்பிங் செய்யப்பட்டவையா? என்பதை சரி பாருங்கள்.
“தற்போது, ஏஐ வீடியோக்கள் உண்மையான வீடியோக்களை விட வேகமாக பரவிவருகின்றன. அனைவரும் இதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு தகவலையும் பகிர்வதற்கு முன்பு ஊடகங்கள் அதனை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஊடகங்கள் பொதுமக்களுக்கு உண்மையை மட்டுமே பகிர வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.