மோசடி புகார் – நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கைது |Fraud complaint

சென்னை,
ரூ.1,000 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.5 கோடி வரை ஏமாற்றிய மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது நிறுவனம் தொடர்பாக ரூ.1, 000 கோடி கடன் பெறுவதற்கு முயற்சித்து வந்திருக்கிறார். இதையறிந்த, நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், கடன் வாங்கித் தருவதாக அவரிடம் கூறி ரூ. 5 கோடி பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட பவர் ஸ்டார், கடனை பெற்றுக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து, தொழிலதிபர் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவில் நடிகர் பவன் ஸ்டார் மீது புகார் செய்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் நடிகர் பவர் ஸ்டார் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்தனர். அதன் பின்னர், ஜாமீனில் வெளியே வந்த நடிகர் 2018-ம் ஆண்டு முதல் கோர்ட்டில் முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்திருக்கிறார்.
இந்த நிலையில், மோசடிப் புகார் தொடர்பாக டெல்லி போலீசாரால் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று கைது செய்யப்பட்டார். சென்னையிலும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2013-ல் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த பவர்ஸ்டார் சீனிவாசன், அதன் பிறகு விக்ரமின் ‘ஐ’ உட்பட பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.