“மைலாஞ்சி” படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியீடு

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘ஆறு அத்தியாயம்’ திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ளார். தற்போது ‘ மைலாஞ்சி’ திரைப்படத்தின் மூலம் முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்கியுள்ளார்.
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ‘கன்னிமாடம்’ படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘கோலிசோடா 2’ புகழ் கிரிஷா குருப் நாயகியாக நடித்துள்ளார். முனீஷ்காந்த், தங்கதுரை, சிங்கம்பிலி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு செழியன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்தப் படத்தின் இசை, டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்திற்கு இளையராஜா பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். மலைப் பிரதேசத்தின் பின்னணியில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பேசும் காதல் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. டிரென்ட் மியூசிக் நிறுவனம் ‘மைலாஞ்சி’ பாடல்களை வெளியிட்டுள்ளது.இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ‘மைலாஞ்சி’ படத்தின் ‘உன்னைநான்விரும்பினேன்’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.