“மேடையில் இருந்து வீசப்படுகிறார்கள்” – இளைஞர்கள் குறித்து வருத்தம் தெரிவித்த இயக்குநர் வசந்தபாலன்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நடைபெற்றது. சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலில், லட்சக்கணக்கானோர் திரள, விஜய் ரேம்ப் வாக் வந்தபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. மாநாட்டில் பெரும்பாலும் இளைஞர்களே சூழ்ந்திருந்தனர். அதிலும், மாநாட்டிற்கு ஒருநாள் முன்பாகவே ஆயிரக்கணக்கானோர் திடலிலேயே தங்கியபடி விஜய்யை பார்க்க காத்திருந்தனர். மாநாட்டு நாள் அன்று பாரப்பத்தி பகுதியில் வெப்பநிலை சதத்தை கடந்த நிலையில், திடலில் காத்திருந்த தொண்டர்கள் வெயிலால் அவதியுற்றனர். இதுபோக, விஜய் ரேம்ப் வாக் சென்றபோது அவரை அருகில் பார்த்துவிட வேண்டும் என்று ஆர்ப்பரித்த தொண்டர்களில் ஒருவர், பவுன்சரால் தூக்கிவீசப்பட்டார். சமூகவலைதளங்களில் இது வைரலாகி விவாதப்பொருளானது.
இப்படியான சூழலில்தான், அங்காடித்தெரு, வெயில், ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன், விஜய் மாநாட்டை விமர்சித்து பேசியுள்ளார். பூக்கி படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், “ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டை பார்த்தேன். அதை பார்த்தபோது, இந்த இளைஞர்கள் அரசியல்படுத்தப்படாமல் இருக்கிறார்கள்.. காலையில் இருந்து வெயிலில் கருகி சாகிறார்கள்.. மேடையில் இருந்து தூக்கி வீசப்படுகிறார்கள் என்பதை பாக்கும்போது கவலையாக இருந்தது. எதோ ஒரு விதத்தில், அந்த இளைஞர்களை அரசியல்படுத்த தவறிவிட்டோமோ.. கவரத்தவறிவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது. அவர்களின் குரல் சினிமாவில் பதிவாகாததால், வேறு திசை நோக்கி அவர்கள் செல்கிறார்கள். அவர்களின் குரல் பேசப்பட வேண்டும், அவர்களின் மனது என்ன? அவர்களின் உலகம் என்ன? அவையெல்லாம் பேசப்பட வேண்டும் என்று எனக்குள் யோசனை வந்து கொண்டே இருந்தது.” என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.