"மெட்ராஸ் மேட்னி" படத்துக்கு வந்த அதிர்ஷ்டம்

சென்னை,
அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு கே.சி. பாலசரங்கன் இசையமைத்துள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி கே, படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொண்டுள்ளனர்.
‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ‘என்னடா பொழப்பு இது’ எனத்தொடங்கும் பாடலை நடிகர் வடிவேலு பாடியுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் வெளியான கங்குவா, தக் லைப் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் வசூலில் பின் தங்கியுள்ளது ஆனால் சின்ன பட்ஜெட் படமான வாழை ,லப்பர் பந்து ,டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளது. இந்த லிஸ்டில் சமீபத்தில் வெளியாகிய ‘மெட்ராஸ் மேட்னி’ படமும் இடம் பெற்றுள்ளது.
ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் நேரும் சந்தோஷம்,துக்கம் பற்றிய கதை இது. இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது . படத்தை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் பிரபல திரைப்பட விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் வெளியான படங்களில் மெட்ராஸ் மேட்னி படம் நல்ல வசூலை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .இப்படி சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவது சினிமாவின் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.