மும்பையிலிருந்து வெளியேறி தென்னிந்தியாவுக்கு செல்ல விரும்பும் பிரபல பாலிவுட் இயக்குனர்

மும்பையிலிருந்து வெளியேறி தென்னிந்தியாவுக்கு செல்ல விரும்பும் பிரபல பாலிவுட் இயக்குனர்


மும்பை,

இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் லக் பை சான்ஸ், பூத் நாத் ரிட்டர்ன் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.

அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘லியோ’ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மகாராஜா படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ரைபில் கிளப் படத்திலும் நடித்துள்ளார்

தேவ் டி , அக்லி , பாஞ்ச் , பிளாக் ப்ரைடே , கேங்ஸ் ஆப் வாஸீப்பூர் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் அனுராக் கஷ்யப். இவரது பல படங்கள் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பாகவே தடை செய்யப்பட்டுள்ளன. இரண்டு பாகங்களாக இவர் இயக்கிய கேங்ஸ் ஆப் வாஸீப்பூர் உலகம் முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்களை கவர்ந்த திரைப்படம். பாலிவுட் சினிமாவையும் பாலிவுட் நடிகர்களின் மீதும் தொடர்ச்சியாக காத்திரமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அனுராக் கஷ்யப். தரமான படங்களை இயக்கியும் தனது படங்களை வெளியிட பல சவால்களை சந்தித்து வந்த அனுராக் காஷ்யப் தென் இந்திய சினிமா பக்கம் கவனம் செலுத்த தொடங்கினார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேற இருப்பதாக அனுராக் கஷ்யப் அதிர்ச்சியளித்துள்ளார். ” பாலிவுட் சினிமா வெறு ஸ்டார்களை மட்டுமே உற்பத்தி செய்ய நினைக்கிறது. ரீமேக் படங்களை எடுப்பது, லாப நோக்கத்தை மட்டுமே மையமாக வைத்து செயல்படுவது என பாலிவுட் சினிமாவை நினைத்தாலே அறுவெறுப்பாக உணர்கிறேன். இவை எல்லாம் சேர்ந்து தரமான படைப்புகளை உருவாக்க தடையாக இருக்கின்றன. திரைப்படங்களை உருவாக்கும் பொருட்செலவுகள் அதிகரித்துள்ள. இதற்கு முக்கிய காரணம் நடிகர்களின் அதிகப்படியான சம்பளம். இதனால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோளாக மாறிவிடுகிறது. இதனால் மாறுபட்ட கதைக்களங்களை எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் ஆகின்றன. ஒரு படம் உருவாக தொடங்கியவுடனே அதை எப்படி மார்கெட் செய்வது என்பது தான் முதன்மையான நோக்கமாக இருக்கும்போது அந்த படைப்பை உருவாக்குவதில் ஈடுபாடு இல்லாமல் ஆகிவிடுகிறது.

இங்கு மஞ்சுமெல் பாய்ஸ் மாதிரியான ஒரு படம் வரவே வராது. அப்படி ஒரு படம் வந்து அது ஹிட் அடித்தால் அதை ரீமேக் தான் செய்வார்கள். வித்தியாசமாக ஒன்றை செய்துபார்க்கும் ரிஸ்கை இங்கு யாரும் எடுக்க மாட்டார்கள்.இங்கு இருக்கும் நடிகர்களும் நடிகர்களாக இருப்பதைவிட ஸ்டார்களாக தான் இருக்க விரும்புகிறார்கள். இங்கு இருக்கும் ஏஜன்ஸிகள் நடிகர்களை ஸ்டார்களாக உருவாக்கிவிட்டு அதன் மூலம் லாபம் சம்பாதிக்கின்றன. உடற்தோற்றத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து நடிகர்களை நடிப்பு பட்டறைக்கு அனுப்புவதற்கு பதிலாக ஜிம்முக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். என் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் சூழல் இருக்கும் தென் இந்திய சினிமாவிற்கு போகப்போகிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *