முதல் படத்திலேயே லாபத்தை யோசிக்காதீர்கள்.. புதிய இயக்குனர்களுக்கு ஆர்.கே.செல்வமணி அறிவுரை

சென்னை,
மகேஷ் செல்வராஜ் தயாரித்து எஸ்.சாம் இயக்கத்தில் தேவ், தேவிகா சதீஷ், ஆகாஷ் பிரேம்குமார், படவா கோபி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘யோலோ’ என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அபோது பேசிய ஆர்.கே.செல்வமணி, ‘‘தற்போதைய சூழலில் படங்கள் எடுப்பதை காட்டிலும், படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைப்பது தான் பெரிய கஷ்டமான விஷயமாக இருக்கிறது. அதேவேளை புதிதாக வரும் இயக்குனர்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். நடிகர் படவா கோபி 7 வருடங்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, ஒரு படத்தை ஆரம்பித்தார். ஆனாலும் அந்த படத்தின் டைரக்டர் எல்லா லாபமும் தனக்கே வரவேண்டும் என்று நினைத்தார். இதனால் 7 ஆண்டுகளாக அந்த படைப்பு வெளிவராமலேயே இருக்கிறது.
இயக்குனர்கள் முதல் படத்திலேயே லாபம் என்ற நோக்கில் யோசிக்கவோ, சிந்திக்கவோ கூடாது. உங்களை நம்பி பணம் போட வரும் தயாரிப்பாளர்களை மதித்து, அனுசரியுங்கள். அப்போது தான் உங்கள் 2-வது படத்தில் இருந்து முன்னேற்றம் தொடங்கும்” என்றார்.