முதன்முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கும் சிம்பு

சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள “தக் லைப்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 3 புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. அந்த வகையில், அடுத்ததாக சிம்பு ‘பார்க்கிங்’ திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘எஸ்டிஆர் – 49’ படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர் – 50’ திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக் லைப்’ என்ற படம் ஜூன் 5ம் தேதி திரைக்கு வரப்போகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் அனைவருமே ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ‘தக் லைப்’ படத்தில் இடம்பெற்ற கமல் ஏ.ஆர்.ரகுமான், சிம்பு ஆகியோருடன் இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார் கலந்துரையாடல் போன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது அப்போது சிம்புவிடத்தில், நீங்கள் நடிக்கவிருந்த ஐம்பதாவது படத்தின் தயாரிப்பில் இருந்து கமல்ஹாசன் விலக, இப்போது நீங்களே தயாரிப்பதற்கு காரணம் என்ன? என்று இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவரிடத்தில் கேட்கிறார்
அதற்கு சிம்பு பதில் கொடுப்பதற்கு முன்பே கமல் குறுக்கிட்டு, தக்லைப் படத்தில் சிம்புவை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவரது ஐம்பதாவது படத்தின் தயாரிப்பை நாங்கள் நிறுத்தினோம் அந்த படத்தை எடுத்திருந்தால் தக்லைப் படத்தில் சிம்புவால் நடித்திருக்க முடியாது அந்த வகையில், நாங்கள் சிம்புவை தியாகம் செய்தோம் என்று கூறுகிறார் கமல்.
அதையடுத்து இயக்குனர் கே.ஸ். ரவிக்குமார் உங்களது ஐம்பதாவது படத்தில் திருநங்கை வேடத்தில் நடிப்பதாக கேள்விப்பட்டேன் ஏற்கனவே இதே மாதிரி வேடத்தில் முன்பு சிவாஜி சார் நடித்திருந்தார் அதன் பிறகு கமல் சார், அஜித் போன்றவர்கள் நடித்தார்கள் என்று கூறுகிறார் அதற்கு சிம்பு பதில் அளிக்கையில், இந்த படத்திலும் திருநங்கை வேடம் இருக்கிறது. ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டும் என்பதால் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் இது முந்தைய படங்களிலிருந்து ஒரு வித்தியாசமான பர்பாமென்ஸை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று பதில் கொடுக்கிறார் சிம்பு
‘எஸ்டிஆர் – 50’ படத்தை சிம்பு தனது தயாரிப்பு நிறுவனமான ஆத்மன் சினி ஆர்ட்ஸின் கீழ் தயாரிக்கிறார். இது அவரின் முதல் தயாரிப்பாகும். இது ஆரம்பத்தில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து அறிவிக்கப்பட்டது . ஆனால், அப்படம் கைவிடப்படவே, அதை சிம்பு கையிலெடுத்துள்ளார். . இதில் சிலம்பரசன் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஆனால் இப்படத்தில் அவர் ஒரு திருநங்கை வேடத்தில், அதுவும் ஒரு நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்.
தயாரிப்பாளராக மாறியது குறித்து சிம்பு கூறுகையில், “நானே தயாரிப்பது சிறந்தது என்று நான் நினைக்கிறேன். நாம் கற்பனை செய்யும் மாதிரியான சினிமாவை சமரசம் இல்லாமல் என்னால் உருவாக்க முடியும்” என்றார்.