மீண்டும் கதாநாயகனாக ‘ஜித்தன்’ ரமேசின் புதிய படம்

சென்னை,
பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மூத்த மகனும், நடிகர் ஜீவாவின் சகோதரருமான ரமேஷ், ‘ஜித்தன்’ படம் மூலமாக சினிமாவுக்குள் நுழைந்தார். ‘ஜித்தன்’ ரமேஷ் என்றே அழைக்கப்படுகிறார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாக நடித்தவர், தற்போது படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் ‘ஜித்தன்’ ரமேஷ் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். ஷாமூன் தயாரித்து அருண் ராஜ் பூத்தணல் இயக்கத்தில் உருவாகும் ‘ஹிடன் கேமரா’ படத்தில் அவர் நடிக்கிறார். கிருஷ்ணா தவா கதாநாயகியாக நடிக்கிறார். அப்புக்குட்டி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இதுகுறித்து ‘ஜித்தன்’ ரமேஷ் கூறும்போது, ‘‘இந்த படத்தை எங்கள் சூப்பர்குட் பிலிம்ஸ் பேனரில் பண்ணலாம் என்றுதான் முதலில் யோசித்தோம். ஆனால் அடுத்து வருவது 100-வது படம் என்பதால், பெரிய ஹீரோ நடிக்கும் பிரமாண்ட படத்தை தயாரிக்கலாம் என்று விட்டுவிட்டோம். மீண்டும் கதாநாயகனாக நடிப்பது மகிழ்ச்சி தருகிறது. சினிமா எனக்கு பிடித்த பயணம். இந்த பயணத்தில் தொடர்ந்து நீடித்திருப்பதும், நிலைத்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது’’, என்றார்.