மீண்டும் இமான் இசையில் பாடும் சின்மயி

மீண்டும் இமான் இசையில் பாடும் சின்மயி


சென்னை,

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் வரும் “ஒரு தெய்வம் தந்த பூவே..” என்கிற பாடலை பாடியதன் மூலமாக இசை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சின்மயி. அதன்பின்னர் இவர் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணியும் பேசியிருக்கிறார். 2018ம் ஆண்டு இவர் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார்களை கூறியிருந்தார். இது சினிமா வட்டாரங்களில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் புகாரை தொடர்ந்து வைரமுத்துவிற்கு பாடல் எழுதுவதற்கான வாய்ப்புகள் குறைந்து போனது.

சின்மயிக்கும் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்பட்டது. டப்பிங் யூனியனில் முறையாக சந்தா செலுத்தவில்லை என்கிற காரணத்தினால் அவர் டப்பிங் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு பின்னணி பாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் வைரமுத்து மீது எழுப்பிய புகார் காரணமாகத்தான் தனக்கு டப்பிங் பேசுவதற்கும், பாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டதாக சின்மயி புகார் கூறியிருந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு சின்மயி எந்த தமிழ் திரைப்பட பாடல்களையும் பாடவில்லை. அவருக்கு தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தமிழைத் தவிர மற்ற அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ‘தக் லைப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் “முத்த மழை..” பாடலைப் பாடும் வாய்ப்பு சின்மயிக்கு கிடைத்தது. இந்தப் பாடலின் ஒரிஜினல் வெர்ஷனை பிரபல பின்னணி பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் தீ பாடியதை விட சின்மயி பாடியது நன்றாக இருந்ததாக இணையத்தில் விவாதங்கள் எழுந்தது. சின்மயின் குரல் ரசிகர்கள் பலரையும் ஈர்த்தது. இவ்வளவு நல்ல குரல் வளம் கொண்ட சின்மயி எதற்காக தடை செய்யப்பட்டார்? அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்தது.

சின்மயிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவரது ஆதவாளர்கள் கூறி வரும் நிலையில் தற்போது டி இமான் சின்மயியை தனது படத்தில் பாட வைத்துள்ளார். கே.எஸ். அதியமான் இயக்கி வரும் ஒரு திரைப்படத்தில் பாட சின்மயிக்கு இசையமைப்பாளர் டி. இமான் வாய்ப்பு கொடுத்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் ரெக்கார்டிங் தியேட்டரில் சின்மயியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “என்றும் ஆன்மாவைத் தொடும் சின்மயியின் குரலில் மீண்டும் ஒரு மாயாஜாலத்தை உருவாக்குகிறேன். என் மனதிற்கு நெருக்கமான ஒரு மெல்லிசைப் பாடல்” என்று பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by D.Imman (@immancomposer)

சின்மயிக்கு மீண்டும் பாட வாய்ப்பு கொடுப்பேன் என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *