மீண்டும் இணையும் "டிராகன்" கூட்டணி ; இயக்குனர் அஸ்வத் கொடுத்த அப்டேட்!

சென்னை,
‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படம் இன்று வெளியானது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘டிராகன்’ படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டிராகன் படம் இன்று தியேட்டரில் வெளியான நிலையில், அஸ்வந் மாரிமுத்து, பிரதீப் இருவரும் ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்த்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதீப் ரங்கநாதன், ‘இப்படி ஒரு அழகான படத்தை எனக்கு கொடுத்த அஸ்வதிக்கு நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கிறேன். டிராகன் படத்தை ஒவ்வொரு முறையும் நான் பார்க்கும் பொழுதும், உணர்ச்சிவசப்பட்டு அழுது விடுவேன். நண்பனாக அவனுடன் நான் 10 ஆண்டு காலம் இருந்து இருக்கிறேன், அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது எனக்கு தெரியும், ஆனால் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்த பிறகு தான் அஸ்வந் ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்பது எனக்கு தெரிந்தது.
டிராகன் திரைப்படம் ஒரு நல்ல படம், கருத்துள்ள படம் இந்த திரைப்படத்தை எனக்கு கொடுத்த என்னுடைய நண்பர் அஸ்வதிக்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை. எனக்கு ஒரு நல்ல இடத்தை கொடுத்து, உங்களின் ஒருத்தனாக, என்னை இந்த இடத்தில் நிற்க வைத்த அனைவருக்கும் நன்றி, இரண்டு கைகளையும் கூப்பி அனைவருக்கும் நன்றி’ என கண் கலங்கியபடி அஸ்வந்தை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்.
இதையடுத்து பேசிய, அஸ்வந் மாரிமுத்து, இதுவரை யாருக்கும் சொல்லாத ஒரு விஷயத்தை இந்த இடத்தில் சொல்லுகிறேன் ஏஜிஎஸ், அஸ்வந், பிரதீப் ரங்கநாதன் காம்போ மீண்டும் வரும். அடுத்த முறை நண்பருக்காக இல்லை, பிரதீப் ரங்கநாதன் என்கிற ஒரு ஸ்டாருக்கான படமாக அது இருக்கும். அடுத்த மூன்று வருடத்தில் நாங்கள் மீண்டும் இணைவோம் என்றார். பின் நண்பன் பிரதீப்பை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்தினார்.
எஸ்.டி.ஆர். 51 படத்தைத் தொடர்ந்து தான் இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பார் என்றும் இந்தப் படத்தையும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் என்றும் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.