''மிஸ்டர் ஜூ கீப்பர்'' – சினிமா விமர்சனம்

சென்னை,
நீலகிரி மலை கிராமத்தில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார், புகழ். சிறுபிள்ளைத்தனமாகவே வளர்ந்துவிட்ட புகழ், காட்டில் திரியும் ஒரு பூனைக்குட்டி மீது இரக்கப்பட்டு, அதை மனைவிக்கு தெரியாமல் வீட்டுக்கு தூக்கி வந்து வளர்க்கிறார்.
நாட்கள் செல்ல, தான் தூக்கி வந்து வளர்ப்பது பூனைக்குட்டி அல்ல புலிக்குட்டி என்று தெரியவருகிறது.
அதேவேளை காட்டில் மாயமாகி போன புலிக்குட்டியை தேடி வனத்துறை ரேஞ்சர் ஆன விஜய் சிலோன், வெறிகொண்டு சுற்றுகிறார். ஒருகட்டத்தில் புலிக்குட்டி இறந்துவிட்டதாக அரசை நம்பவைக்க உயர் அதிகாரியுடன் சேர்ந்து திட்டமிடுகிறார்.
இதற்கிடையில் புலிக்குட்டியை தாயுடன் சேர்த்து வைக்க புகழ் தனது மனைவியுடன் காட்டுக்குள் செல்கிறார். அங்கு பல்வேறு தடைகளை எதிர்கொள்கிறார். இறுதியில் என்ன ஆனது? என்பதே கதை.
வெகுளியாக நடித்தாலும், புகழ் நடிப்பை பார்க்கும்போது, ‘தெய்வ திருமகள்’ விக்ரமை பார்ப்பது போல இருக்கிறது. புதிதாக முயற்சித்திருக்கலாமே…
ஷெரின் கஞ்சுலாவின் நடிப்பு கவனம் பெறுகிறது. அழகிலும் வசீகரிக்கிறார். ரேஞ்சராக வரும் விஜய் சிலோன், சிங்கம்புலி, முத்துக்காளை, இமான் அண்ணாச்சி, வர்கீஸ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
தன்விர் மீரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிப்பை தருகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை முட்டுக்கொடுத்துள்ளது.
எதார்த்தமான காட்சிகள் படத்துக்கு பலம். திரைக்கதையில் புலியின் பாய்ச்சல் இல்லையே… புலியை பாசமாக வளர்க்கும் காட்சிகள் வித்தியாசமாக இருந்தாலும், ஏற்புடையதா? என்ற கேள்வி எழுகிறது. செல்லப்பிராணிகளை வன விலங்குடன் ஒப்பிடுவது நியாயமா?
செல்லப்பிராணிகள் வளர்ப்போரை ஊக்குவிக்கும் விதமாக புதிய கதைக்களத்தில் கதை சொல்லி கவனிக்க வைத்துள்ளார், இயக்குனர் ஜே.சுரேஷ்.
மிஸ்டர் ஜூ கீப்பர் – ஜாக்கிரதை பாஸ்.