மாற்றத்துடன் மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியான “குட் பேட் அக்லி”

அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் ‘ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பாடல்கள் இடம் பெற்றிருந்தது.இப்பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் அதற்கு நஷ்ட ஈடாக ரூ.5 கோடி தர வேண்டும் என்றும், இளையராஜா தரப்பில் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இளையராஜா நோட்டிஸிற்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் பதில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அதில் சட்டப்பூர்வமான உரிமையாளர்களிடம் இருந்து பாடல்களுக்கு அனுமதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை என தெரிவித்து இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு வரும் 22ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தும் படத்தில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் இளையராஜா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதாக படக்குழுவிற்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தார். இதையடுத்து பாடல்கள் நீக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் படமே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டது. இது தொடர்பாக இளையராஜா பதிலளிக்க உத்தரவிடப்பட்டு வரும் 24ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ‘குட் பேட் அக்லி’ படம் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது. இளையராஜா பாடல்கள் அனைத்தையும் படக்குழு நீக்கிவிட்டது. அதற்கு புதிதாக ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையமைத்திருக்கிறார். அர்ஜுன் தாஸ் நடனமாடும் ‘ஒத்த ரூபாயும்’ பாடல் முழுமையாக நீக்கப்பட்டு, அதில் பாடலாக அல்லாமல் புதிதாக பின்னணி இசையாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.