மாதம்பட்டி ரங்கராஜ் மீது முதல்-அமைச்சரிடம் புகாரளித்த ஜாய் கிரிஸில்டா

சென்னை,
பிரபலங்களின் வீட்டு சமையல் என்றாலே அது மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் என சொல்லும் அளவுக்கு பிரபலமடைந்தவர் ரங்கராஜ். இவர் 2019-ம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்கஸ்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை ராஜு சரவணன் இயக்கியிருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி பெயர் ஸ்ருதி. கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரிய போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆன புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா வெளியிட்டிருந்தார். திருமண புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா 6 மாத கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார்.
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற விவாதம் இணையத்தில் வைரலானது.சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து ஜாய் கிரிஸில்டாவுடன் எடுத்த அனைத்து போட்டோவையும் டெலிட் செய்து விட்டார்.
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் ஜாய். மேலும் தன்னை சந்திப்பதை தவிர்ப்பதாகவும், திருமணம் செய்து கொள்வது பற்றி கேட்டால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னுடன் வாழ விரும்பவில்லை என அவர் சொல்வதாகவும் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
இந்த நிலையில், தனது சமூக வலைதள பக்கம் வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்துள்ளார் ஜாய் கிரிஸில்டா. அந்த பதிவில் அவர் “பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கியது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்து 10 நாட்கள் ஆகிறது. இப்போது நான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். இந்த நிலையிலும், நான் என் பார்வையற்ற தாயுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றேன். எனது புகாரின் நிலை என்ன ஆனது என்பது எனக்குத் தெரியவில்லை. இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு விஐபி அந்தஸ்து அளிக்கப்படுகிறது, மேலும் அவர் எனக்கு எதிராக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.
அப்பா உங்கள் அரசாங்கத்தை என்னைப் போன்ற பெண்கள் நம்புகிறார்கள். இதில் நீங்கள் தலையிட்டு நீதி வழங்குமாறு நான் உங்களிடம் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு விஐபியோ, ஒரு பிரபலமோ பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சுற்றித் திரிய முடியுமா? என் வயிற்றில் உள்ள குழந்தைக்கும், எனக்கும் நீதி வேண்டும்” என குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தன்னுடைய பதிவில் டேக் செய்துள்ளார் ஜாய் கிரிஸில்டா. அவரின் இந்த பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகிறது.