மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார் – ஜாய் கிரிஸில்டா புகார்

சென்னை,
பிரபலங்களின் வீட்டு சமையல் என்றாலே அது மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் என சொல்லும் அளவுக்கு பிரபலமடைந்தவர் ரங்கராஜ். இவர் 2019-ம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்கஸ்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை ராஜு சரவணன் இயக்கியிருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி பெயர் ஸ்ருதி. கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரிய போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
ஜாய் கிரிஸில்டா, திரை பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர், 2018ம் ஆண்டில் பொன் மகள் வந்தாள் திரைப்படத்தின் இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக் என்பவரை திருமணம் செய்தார். 2023ம் ஆண்டு, இவர்கள் பிரிவதாக அறிவித்தனர்.
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆன புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா வெளியிட்டிருந்தார். திருமண புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா 6 மாத கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து இருவரும் முத்தம் கொடுத்துக்கொள்ளும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இதனை எடிட் செய்ததே மாதம்பட்டி ரங்கராஜ் என்று அவரை டேக் செய்திருக்கிறார். இது இணையத்தில் பேசு பொருளானது.
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற விவாதம் இணையத்தில் வைரலானது.
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து ஜாய் கிரிஸில்டாவுடன் எடுத்த அனைத்து போட்டோவையும் டெலிட் செய்து விட்டார்.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.