மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா நோட்டீஸ்

சென்னை,
சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாநில மகளிர் ஆணையம் என்பதையெல்லாம் தாண்டி தற்போது நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா வழக்கு தொடுத்துள்ளார். சென்னை ஐகோர்ட்டுக்கு வெளியே மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பலர் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் சென்னை ஐகோர்ட்டை அணுகியுள்ளேன். இந்தப் பிரச்சினை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபட நான் விரும்பவில்லை. நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பதுபோல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்”, என்று மாதம்பட்டி ரங்கராஜ் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஜாய் கிரிசில்டா தரப்பில் இருந்து மாதம்பட்டி ரங்கராஜுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ரங்கராஜுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில், தங்களது தரப்பில் அணுகியதாக பொய்யான, அவதூறாக குற்றச்சாட்டை அவர் பரப்பியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் ரங்கராஜ் அந்த அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க கோரிக்கை விடுத்துள்ளார். தவறினால், உரிமையியல், குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்றும் ஜாய் கிரிசில்டா எச்சரிக்கை விடுத்துள்ளார்.