'மழையில் நனைகிறேன்' படம் எப்படி இருக்கிறது? – விமர்சனம்

'மழையில் நனைகிறேன்' படம் எப்படி இருக்கிறது? – விமர்சனம்


பிரபல மலையாள நடிகர் அன்சன் பால். இவர் தமிழில் ‘ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘மழையில் நனைகிறேன்’. இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரித்து இருக்கிறார்கள். டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், ‘மழையில் நனைகிறேன்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

லட்சியம் இன்றி ஊர் சுற்றும் வசதியான குடும்பத்தை சேர்ந்த நாயகன் அன்சன் பால் வெளிநாட்டில் மேற்படிப்புக்கு செல்லும் கனவுடன் இருக்கும் நாயகி ரெபா ஜானை கண்டதும் காதலிக்கிறார். காதலை ரெபா ஜான் ஏற்க மறுத்த நிலையிலும், தொடர்ந்து முயற்சி செய்து தன்னை காதலிக்க வைத்து விடுகிறார். இவர்கள் காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு வருகிறது. ஒரு விபத்திலும் சிக்குகின்றனர்.

இதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பது மீதி கதை. அன்சன் பால் இளம் காதலனாக காதல் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். ரெபா ஜான் வசீகரிக்கிறார். தேர்ந்த நடிப்பையும் வழங்கி உள்ளார். காதல் காட்சிகளில் இருவருமே தேவையான பங்களிப்பை கொடுத்து இருப்பது சிறப்பு.

நாயகனின் தந்தையாக வரும் மேத்யூ வர்கீஸ், தாயாக வரும் அனுபமா குமார் பாசமான பெற்றோராக நெகிழ வைக்கிறார்கள். கிஷோர் ராஜ்குமார், ஷங்கர் குரு ராஜா, வெற்றிவேல் ராஜா ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வழங்கி உள்ளனர். விஷ்ணு பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் கதையோடு ஒன்ற செய்கிறது. கல்யாண் ஒளிப்பதிவு கச்சிதம்.

திரைக்கதையில் சில காட்சிகள் யூகிக்க முடிவது பலகீனம். வசனங்கள் கவனம் பெறுகின்றன. மென்மையான காதல் கதையை திருப்பங்களுடன் சுவாரஸ்யமாகவும், ரசிக்கும்படியும் சொல்லி கவனம் பெறுகிறார் இயக்குனர் டி.சுரேஷ்குமார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *