மலையாள சினிமாவில் அறிமுகமாகும் சாய் அபயங்கர்

பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு, வாரிணி தம்பதியின் மகன் சாய் அபயங்கர். இவர் ‘கட்சி சேர’ என்ற பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார். இந்த பாடல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து ‘ஆச கூட’என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இதனால் அவருக்கு லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்திற்கும் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸின் அல்லு அர்ஜூன் படம், சூர்யாவின் கருப்பு, லாரன்ஸின் பென்ஸ் உள்ளிட்ட 10 படங்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஷேன் நிகாம் முக்கியமானவர். இவர் சில மாதங்களுக்கு முன் மெட்ராஸ்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் கலையரசன், நிஹாரிகா, ஐஷ்வர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
ஷேன் நிகாமின் 25- வது திரைப்படமான ‘பல்டி’ படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருடன் பிரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்நிலையில் ‘பல்டி’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இது இவர் இசையமைக்கும் முதல் மலையாள திரைப்படமாகும். இதற்கு ஒரு புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மோகன்லால் இவரை வரவேற்கும் படியான ஆடியோ இடம்பெற்றுள்ளது. படத்தை சந்தோஷ் குருவில்லா தயாரிக்க தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் ஓணத்தை முன்னிட்டு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.