"மதராஸி" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

சென்னை,
தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு தமிழில் ‘மதராஸி’ என்றும் இந்தியில் ‘தில் மதராஸி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தபடத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. ஆக்சன் திரில்லர் ஜனரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா அளவில் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, பர்ஸ்ட் சிங்கிள் அடுத்த வாரம் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது. அனிருத்- சிவகார்த்திகேயன் காம்போவில் வெளியாக உள்ள பர்ஸ்ட் சிங்கிளை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.