மக்களுக்கு நல்லது செய்யவே விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்- நடிகர் சிவராஜ்குமார் கருத்து

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் கோவிலில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நேற்று மதியம் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழக அரசியல் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவரது அரசியல் பயணம் வரவேற்கத்தக்கது. கரூர் பிரசாரத்தில் எவ்வாறு உயிர்ப்பலி ஏற்பட்டது? என்பது தெரியவில்லை. நடிகர் விஜய் நன்றாக யோசித்து நிதானமாக சில முடிவுகளை எடுக்க வேண்டும். சக நடிகராகவும், சகோதரனாகவும் சொல்கிறேன்’’ என்றார்.
முன்னதாக ‘பார்க்கிங்’ திரைப்படத்தில் நடித்து தேசிய விருது வென்ற துணை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் அனைத்து சுவாமி சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார்.