மகனின் பட்டமளிப்பு விழா புகைப்படங்களை பகிர்ந்த தனுஷ்

சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் நடிகர் தனுசுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். தனுஷ்-ஐஸ்வர்யா இடையேயான பிரச்சினையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர். பின்னர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் தொடர் படப்பிடிப்பிலேயே இருக்கிறார். இவர் நடிப்பில் உருவான குபேரா, இட்லி கடை படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. தற்போது, ஹிந்தியில் தேரே இஸ்க் மெய்ன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதுபோக, கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், தனுஷின் மூத்த மகன் யாத்ரா தன் உயர்கல்வியை நிறைவு செய்திருக்கிறார். தன் மகன் உயர்கல்வியை முடித்ததற்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தனுஷ் தன் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்து கலந்துகொண்டு மகனை வாழ்த்தியிருக்கிறார்..இதுகுறித்து, இஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்ட தனுஷ், “பெருமைமிகு பெற்றோர்” எனப் பதிவிட்டுள்ளார்.
விவாகரத்து பெற்றிருந்தாலும் மகன்கள் விஷயத்தில் தனுஷும் ஐஸ்வர்யாவும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.