போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் 16 மணி நேரமாக விசாரணை

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் 16 மணி நேரமாக விசாரணை


சென்னை,

சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் கிருஷ்ணாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்தினாரா? அல்லது போதைப்பொருள் விற்பனை செய்பவர்களிடம் இவருக்கு தொடர்பு எதுவும் இருந்ததா? என்ற அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா உலகமும் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. போதைப்பொருளுக்கு அடிமையான நடிகர் – நடிகைகளை போலீசார் தற்போது கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் சொன்ன தகவல் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். நடிகர் கிருஷ்ணா, கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் அவரை கைது செய்ய தனிப்படை கேரளாவுக்கு விரைந்தனர்.

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டு உள்ளதால், நடிகர் கிருஷ்ணாவை எப்படியாவது கைது செய்தே ஆக வேண்டும் என்று போலீசார் தீவிரமாக களம் இறங்கினர். போலீசார் தேடி வந்தநிலையில் நேற்று மாலை நடிகர் கிருஷ்ணா திடீரென்று போலீசார் முன்னிலையில் ஆஜரானார். அவரை சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

அதன்பிறகு அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசரணை தற்போது 16 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *