போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்

சென்னை,
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஸ்ரீகாந்த். இவர் முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வாங்கியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது முதலில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதே இல்லை என்றார். இதனால் அவரது ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், ஸ்ரீகாந்த் ‘கொகைன்’ என்ற போதைப்பொருளை பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கானா நாட்டைச் சேர்ந்த நபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நேற்று இரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் ஸ்ரீகாந்த் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.
அதாவது, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைதானதற்கு முன்புதான் அவரிடம் 250 கிராம் கொகைன் பாக்கெட் வாங்கினேன். அதை வைத்து கடந்த சனிக்கிழமை இரவு நுங்கம்பாக்கம் வீட்டில் கொக்கைன் பார்ட்டி நடத்தினேன். பிரசாத்தை மட்டுமே எனக்குத் தெரியும். அவர் என்னை வைத்து படம் தயாரித்துள்ளார். எனக்குத் தர வேண்டிய ரூ.10 லட்சத்தை கேட்டபோது, கொக்கைன் கொடுத்து பழக வைத்தவர் பிரசாத்தான். பணம் கேட்கும்போதெல்லாம் கொகைன் கொடுத்து பழக்கத்தை அதிகப்படுத்தியது அவர்தான்.” என்று நடிகர் ஸ்ரீகாந்த் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.