‘பொன்னியின் செல்வன்’ பட பாடல் விவகாரம்: ஏ.ஆர் ரகுமானுக்கு எதிரான உத்தரவு ரத்து

டெல்லி,
பத்மஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிபுதத்தீன் தாகர். இவர், பொன்னியின் செல்வன் 2-ல் வரும் ‘வீர ராஜ வீரா’ என்ற பாடல் தனது தந்தை நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து நகல் எடுக்கப்பட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா புரொடக்ஷன் மீது காப்புரிமை மீறல் வழக்கு ஒன்றை டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி ஐகோர்ட்டு தனி நீதிபதி இடைக்கால தீர்ப்பு வழங்கினார். அதில், “வீர ராஜ வீரா பாடல் ஈர்ப்பினால் உருவாக்கப்பட்டதாக இல்லை. ஆனால் உண்மையில், அதன் உள்ளீடு, உணர்வுகள் மற்றும் பாடல் கேட்கும்போது ஏற்படும் தாக்கத்தில் சிவ ஸ்துதியை ஒத்துள்ளது. பாடலில் வேறு சில கூறுகளை சேர்ப்பது, பாடலை ஒரு நவீன இசையமைப்பைப் போல மாற்றி இருக்கலாம். ஆனால், அடிப்படை இசையமைப்பு ஒரே மாதிரியாக இருக்கிறது. இது அசல் இசையமைப்பாளர்களின் காப்புரிமையை மீறும் செயலாகும். எனவே ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பொன்னியின் செல்வன் 2 தயாரிப்பு நிறுவனங்கள் ரூ.2 கோடி அபராத தொகையாக டெல்லி ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் கட்ட வேண்டும் என்று இடைக்கால உத்தரவிட்டார். இதனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் ஏ.ஆர் ரகுமான் தரப்பு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.