'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்பட விமர்சனம்

'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்பட விமர்சனம்


சென்னை,

அரசு ஆஸ்பத்திரி நர்சாக பணியாற்றும் விஜித், ஒரு குழந்தை கடத்தல் வழக்கில் கைதாகிறார். விஜித்தின் பின்னணி அறிய, அவரது சொந்த ஊருக்கு சென்று போலீசார் விசாரிக்கிறார்கள். அப்போது, பல ஆண்டுகளுக்கு முன்பு அக்கிராமத்தில் வேறு சாதி பெண்ணை காதலித்ததற்காக, அந்த காதலனை ஊர் பெரியவர்களாக இருக்கும் மைம்கோபி, அருள்தாஸ் தீயிட்டு கொளுத்தி எரித்துள்ளதும், அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிவதும் போலீசாருக்கு தெரியவருகிறது.

மேலும், விஜித்தும், கேரளாவை சேர்ந்த கிறிஸ்தவ பெண்ணான ஷாலியும் காதலித்து திருமணம் செய்துகொண்டதும், அவர்கள் பிரச்சினையில் மாட்டிக்கொண்டதை அறிகிறார்கள். இதற்கிடையில் விசாரணையின்போது, போலீசாரிடம் விஜித் சில உண்மைகளை கூற அனைவரும் அதிர்ந்து போகிறார்கள். போலீசாரிடம் விஜித் கூறியது என்ன? விஜித்தின் காதலி ஷாலி என்ன ஆனார்? என்பதே மீதி கதை. 

அறிமுக படத்திலேயே அழுத்தமான நடிப்பை கொடுத்து அசர வைத்துள்ளார், விஜித். எல்லா பரிமாணங்களிலும் அசாத்திய நடிப்பை கொட்டி, தந்தை (தங்கர்பச்சான்) சொல்லிக்கொடுத்த பாடம் வீண்போகவில்லை என்று நிரூபித்துள்ளார். சோக காட்சிகளில் கலங்கடிக்கிறார்.

அழகான நாயகியாக வந்து செல்லும் ஷாலி, நடிப்பிலும் ‘ஸ்கோர்’ செய்துள்ளார். தனக்கு தானே பிரசவம் பார்க்கும் காட்சியில் அனுதாபம் அள்ளுகிறார். சாதி வெறி பிடித்த ஊர்த்தலைவர்களாக மைம்கோபி, அருள்தாஸ் நடிப்பில் மிரட்டுகிறார்கள். ஆணவ வெறியில் கொலை செய்யும் போக்கு பயத்தை உண்டாக்குகிறது.

தீபா, கீதா கைலாசம், சுபத்ரா ராபர்ட், லோகு, சாய் வினோத் ஆகியோரின் எதார்த்த நடிப்பை பாராட்டலாம். ஜே.பி.தினேஷ்குமாரின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்ற செய்கிறது. இளையராஜாவின் இசை வருடி செல்கிறது. ‘ஒரு மனைவியாய்…’ பாடல் மீண்டும் கேட்கும் ரகம்.

எதார்த்த காட்சிகள் பலம். மெதுவாக நகரும் திரைக்கதை பலவீனம். பிறப்பால் அல்ல, வளர்ப்பால் தான் சாதிவெறி தலைதூக்குகிறது என்ற கருத்தை ஆணித்தரமாக கொண்டு, பரபரப்பான கதைக்களத்தில் படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், சிவபிரகாஷ்.

பேரன்பும் பெருங்கோபமும் – சாதி வெறியர்களுக்கான சாட்டையடி.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *