‘பேபி & பேபி’ திரை விமர்சனம்

‘பேபி & பேபி’ திரை விமர்சனம்



சென்னை,

அறிமுக இயக்குனர் பிரதாப் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் ‘பேபி & பேபி’. இப்படத்தில் ஜெய் உடன் சத்யராஜ் மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். பிரக்யா நாக்ரா மற்றும் சாய் தன்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். அழகான பேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகி உள்ளது. குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘பேபி & பேபி’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

ஜெய், யோகிபாபு ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருந்து திரும்புகிறார்கள். சென்னை விமான நிலையத்தில் இருந்து மனைவி மற்றும் தனது ஆண் குழந்தையுடன் கோவைக்கு கிளம்புகிறார் ஜெய். இதுபோல் யோகிபாபு தனது பெண் குழந்தையுடன் மதுரை கிளம்புகிறார்.

அப்போது எதிர்பாரதவிதமாக பெண் குழந்தை ஜெய்யிடமும் அவரது ஆண் குழந்தை யோகிபாபுவிடமும் மாறி விடுகிறது. ஜெய் தந்தை சத்யராஜ் பரம்பரை சொத்துக்கு வாரிசாக்க பேரனையும் யோகிபாபு தந்தை இளவரசு ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில் பெண் வாரிசையும் எதிர்பார்த்து ஊரில் காத்து இருக்கிறார்கள். ஜெய், யோகிபாபு ஆகிய இருவரும் குழந்தை மாறியதை எப்படி சமாளிக்கிறார்கள்? இருவருடைய குழந்தைகளும் அவர்களின் பெற்றோரிடம் வந்து சேர்ந்ததா? என்பது மீதி கதை.

ஜெய் ஹீரோயிசம் இல்லாத கேரக்டரில் அமைதியாக அடக்கி வாசித்துள்ளார். குழந்தைக்காக கலங்கும் சென்டிமென்ட் காட்சிகள் அருமை. யோகிபாபு திரை இருப்பு தியேட்டரை கலகலப்பாக வைத்துள்ளது. நாயகிகள் சாய் தன்யா, பிரக்யா நாக்ரா ஆகியோருக்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லையென்றாலும் சென்டிமென்ட் காட்சிகளிலும் பாடல் காட்சியிலும் ஸ்கோர் செய்துள்ளார்கள்.

சத்யராஜ் ஆண் வாரிசுக்காக ஏங்கும் கதாபாத்திரத்தை செவ்வனே செய்து தன் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். சகுனம் பார்க்கும் இளவரசு நவரசங்களையும் கலந்துக்கட்டி அடித்துள்ளார். கீர்த்தனா அனுபவ நடிப்பால் கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், ஸ்ரீமன், சிங்கம்புலி, நான் கடவுள் ராஜேந்திரன், தங்கதுரை, ரெடின் கிங்ஸ்லி, விக்னேஷ் காந்த், கல்கி ராஜா, சேஷு ஆகியோர் கதையை கலகலப்பாக நகர்த்த உதவியுள்ளனர். இமான் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசையிலும் கவனம் செலுத்தி படத்தை தாங்கிப் பிடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் சாரதி கேமரா கோணங்களால் கதையை கலகலப்பாக நகர்த்த உதவியுள்ளார்.

குழந்தை காணவில்லை என்ற பதட்டத்தோடு விறுவிறுப்பாக நகர்கிறது படம். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் மாறிப்போகும் கதையை நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியுள்ளார் இயக்குனர் பிரதாப்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *