'பேட் கேர்ள்' டீசர் சர்ச்சை: வெற்றிமாறன் செய்ததை ஏற்க முடியாது – இயக்குனர் மோகன் ஜி

'பேட் கேர்ள்' டீசர் சர்ச்சை:  வெற்றிமாறன் செய்ததை ஏற்க முடியாது – இயக்குனர் மோகன் ஜி


சேலம்,

சேலத்தில் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, ” புதிய படத்தின் அறிவிப்பு வெளியிட இருந்த நிலையில் பஞ்சாமிர்தம் குறித்து பேசியதால், என்மீது வழக்கு தொடரப்பட்டது. இதற்கு முன்பாக பேசியிருந்த தயாரிப்பாளருடன் பேச்சுவார்த்தையில் உடன்படவில்லை; இதனால்தான் தாமதம் ஏற்பட்டது. தற்பொழுது மற்றொரு தயாரிப்பாளர் உடன் பேசி படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

ஒரு மனிதன் என்றால் நல்லது, கெட்டது என்று இரண்டுமே இருக்கும். இது பெரியாருக்கும் முரண்பாடான விஷயம் அல்ல, அவருக்கு இருக்கும். நல்லது என்றால் பெரியாரின் சமூகநீதி என்பதை எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். மற்றதை எல்லாம் கேள்வி போடும்போது அதிர்ச்சியாக உள்ளது என கூறினார். மேலும் நான் கைதானபோது எனது செல்போன் காவல்துறையிடம் 40 நாட்கள் இருந்தது. பின்னர் வெளியே வந்தவுடன் செல்போனை வாங்கியபோது செல்போனில் இருந்த அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறினார். இதுதொடர்பாக இதுவரை விசாரித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது செல்போனில் தான் படத்தின் கதை, அடுத்த படம் குறித்த அனைத்து தகவல்களும் இருந்தது எனவும் தெரிவித்தார்.

என்னுடைய படங்களில் இல்லாத விஷயங்களை சொன்னால்தான் சர்ச்சை. சமூகத்தில் இருக்கும் பிரச்சினைகளை கூறினால் அது சர்ச்சை இல்லை. சமூகத்தில் நடக்கும் உண்மைகளை வெட்ட வெளிச்சமாக கூறியதால் சர்ச்சை என்ற வார்த்தை பயன்படுத்துகிறார்கள். எனது படங்கள் எளிய மக்களுக்கான படமாக உள்ளது. எனவே என்னுடைய அடுத்த படத்தில் நீங்கள் கேள்விப் படாத பெரிய விஷயத்தை பேசப் போகிறேன் என்றார்.

இயக்குனர் வெற்றிமாறனின் தீவிர ரசிகன் நான். நான் அதிகப்படியாக சூட்டிங் எடுத்து நாட்கள் 33 நாட்கள் மட்டுமே. ஆனால் டைரக்டர் வெற்றிமாறன் 240 நாட்கள் வரை சூட்டிங் எடுக்கிறார். அது அவருக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம், அனைத்து இயக்குனர்களுக்கும் அது கிடைத்துவிடாது. வெற்றிமாறன் தயாரித்துள்ள பேட் கேர்ள் என்ற படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் சிறைபட்டு கிடப்பது போன்றும், படிக்க அனுப்புவதில்லை, சுதந்திரமாக இல்லை என சித்தரிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. பிராமணர் சமூகத்தை சேர்ந்த மக்களை காண்பித்தது ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்கள் குறித்து ட்ரெய்லரில் வரும் காட்சிகள், வசனங்கள் கடுமையாக கண்டிக்ககூடியது. அதனால்தான் அது குறித்து காட்டமான பதில் அளித்து இருந்தேன்.

ஆண்களை தான் போதைக்கு அடிமையாக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். காலேஜ் செல்லும் பெண்களை தான், குறி வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது பள்ளிக்கு செல்ல பெண்களை குறி வைத்தும் படம் எடுக்கிறார்கள். திருமணத்தைத் கடந்த உறவு உள்ளிட்டவைகளை எல்லாம் சினிமாவில் திணித்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. அவருடைய ஒரு ரசிகராகவும், ஒரு இயக்குனராக நானும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுதொடர்பாக வெற்றிமாறன் காதிற்கு சென்று இருக்கும்; அதை சரிசெய்து கொண்டு தான் படத்தை வெளியிடுவார் என்று நினைக்கிறேன். இயக்குனர் வெற்றிமாறன் அவரது உதவி இயக்குனர்கள் படத்தை எடுத்தாலும், கதை விவாதத்தில், படத்தில் உருவாக்கத்திலும் இருப்பார். இதைப் பெண் இயக்குனர் தான் எடுத்தார் என்று கூறி தப்பிவிட முடியாது” எனவும் கூறினார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *