பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை நடைபெறுகிறது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

சென்னை,
97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் இன்றிரவு தொடங்குகிறது. இந்திய நேரப்படி, நாளை காலை 5.30 மணி முதல் இந்த விழா நடைபெறுகிறது. எம்மி விருது பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கோனன் ஓ பிரையன் ஆஸ்கர் விழாவை முதல்முறையாக தொகுத்து வழங்க இருக்கிறார்.
ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் ஸ்பானிஷ் திரைப்படமான எமிலியா பெரெஸ் 13 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அதிக பிரிவுகளில் தேர்வான ஆங்கிலம் மொழி அல்லாத திரைப்படம் என்ற புதிய சாதனையை இத்திரைப்படம் படைத்திருக்கிறது. இத்திரைப்படத்தில் நடித்த கார்லா சோபியா காஸ்கான் ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வான முதல் திருநங்கையாகும்.
அடுத்ததாக புரூட்டலிஸ்ட் என்ற ஆங்கில திரைப்படம் 11 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. அதனைத்தொடர்ந்து, விக்கட் 10 பிரிவுகளிலும், கான்கிளேவ், எ கம்பிளிட் அன்னோன் ஆகிய படங்கள் 9 பிரிவுகளிலும் தேர்வாகி இருக்கின்றன.
இதில், எமிலியா பெரெஸ், விக்கட், டியூன் 2, தி புரூட்டலிஸ்ட் ஆகிய படங்கள் சிறந்த திரைப்படம், இயக்கம், நடிகர், நடிகை பிரிவுகளில் தேர்வாகி இருப்பதால் இத்திரைப்படங்களுக்கு இடையே கடும் போட்டி நிகழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியா சார்பில் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரித்த ‘அனுஜா’ என்ற குறும்படம் சிறந்த குறும்படம் என்ற பிரிவில் தேர்வாகி உள்ளது.