பெண்கள் ஒன்று சேர்ந்தால் நீதி கிடைக்கும் – நடிகை பார்வதி, If women come together, justice will prevail

தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் பார்வதி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
“பெண்களே பெண்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்ற கட்டுக்கதையை முறியடிக்க பெண்களுக்கு இடையே கூட்டணி தேவை. பெண்கள் ஒன்று சேர்ந்தால் நீதி கிடைக்கும். மலையாள நடிகர் சங்கம் அதன் நோக்கங்களை நிறைவேற்ற தவறி விட்டது. இதனாலேயே சினிமாவில் பெண்களுக்காக தனியாக அமைப்பு உருவாக்கப்பட்டது.
நான் நடிக்க வந்த புதிதில் நடிகைகளின் சினிமா ஆயுட்காலம் குறைவாகவே இருந்தது. கொஞ்சம் படங்களில் நடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளவும், சினிமாவை விட்டு விலகவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். தங்களுடன் நடிக்கும் நடிகைகள் புதியவர்களாக இருக்க வேண்டும் என்று நடிகர்கள் கருதியதால் இந்த நிலைமை ஏற்பட்டது.
இந்த பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவரவும், சினிமாவில் பெண்கள் நலனுக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறேன். சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் அவலங்களை மையப்படுத்தி எதிர்காலத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளேன்”. இவ்வாறு அவர் கூறினார்.