பூஜையுடன் தொடங்கும் டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனரின் புதிய படம்

சென்னை,
குட்நைட், லவ்வர், டூரிஸ்ட் பேமிலி போன்ற வெற்றிப் படங்களை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் ஏ.ஆர்.பி. எண்டர் டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் யுவராஜ், மகேஷ்ராஜ் பசலியான் ஆகியோர் தயாரித்து இருந்தனர்.
இந்நிலையில் எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஷ் பசலியான் புதிய படமொன்றை தயாரிக்க இருக்கிறார். படத்தின் கதாநாயகனாக டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனரான அபிஷன்ஜீவிந்த் நடிக்கிறார். கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நடிக்க இருக்கிறார். டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் படத்தை இயக்குகிறார்.
படத்தின் பூஜை வருகிற 3-ந்தேதி சென்னையில் நடக்கிறது. ரூ.8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டூரிஸ்ட் பேமிலி படம் ரூ.100 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது. இதையொட்டி திரை உலகின் மொத்த பார்வையும் இயக்குனர் அபிஷன்ஜீவிந்த் மீது விழுந்தது.
சமீப காலமாக அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் கதாநாயகனாக அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.