புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 1 லட்சம் டாலர் நிதி உதவி வழங்கிய அமெரிக்க பாடகி

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 1 லட்சம் டாலர் நிதி உதவி வழங்கிய அமெரிக்க பாடகி


வாஷிங்டன்,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்(வயது 35). இவர் பாப் இசை உலகில் சர்வதேச அளவில் மிகப் பிரபலமானவராகவும், அமெரிக்காவின் பணக்கார இசைக் கலைஞர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். மேலும், சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவரான டெய்லர் ஸ்விப்ட், பலமுறை நிதி உதவிகளை வழங்கி கவனம் ஈர்த்துள்ளார்.

கடந்த ஆண்டு கான்சாஸ் மாகாணத்தில் கல்வி மையம் அமைப்பதற்காக 2,50,000 அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் ரூ.2.19 கோடி) நிதி உதவி வழங்கினார். கடந்த அக்டோபர் மாதம் மில்டன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக 5 மில்லியன் டாலர்(ரூ.5 கோடி) நிதியை வழங்கி இருந்தார். மேலும் பல்வேறு தனிநபர்களின் மருத்துவ தேவைகளுக்காகவும் டெய்லர் ஸ்விப்ட் நிதி உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில், பாடகி டெய்லர் ஸ்விப்ட் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2 வயது பெண் குழந்தையின் சிகிச்சைக்காக 1,00,000 டாலர்(ரூ.87.9 லட்சம்) நிதி உதவி வழங்கியுள்ளார். முன்னதாக டெய்லர் ஸ்விப்ட்டின் தீவிர ரசிகையான கேட்லின் ஸ்மூட் என்ற பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது குழந்தைக்கு மூளை புற்றுநோய் 4-வது கட்டத்தில் இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

அதோடு, தான் கர்ப்பமாக இருந்தபோது டெய்லர் ஸ்விப்ட்டின் பாடல்களை தொடர்ந்து கேட்டு வந்ததாகவும், தனது குழந்தையும் இப்போது டெய்லரின் ரசிகையாகி விட்டதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், தனது குழந்தை புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து, பாடகி டெய்லர் ஸ்விப்டின் இசை நிகழ்ச்சியை நேரில் காண்பதற்காக செல்வாள் என்று உருக்கமாக பேசியிருந்தார்.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய அந்த வீடியோ, டெய்லர் ஸ்விப்டின் கவனத்திற்கு சென்ற நிலையில் தனது தீவிர ரசிகையின் குழந்தைக்காக டெய்லர் ஸ்விப்ட் தற்போது நிதி உதவி வழங்கியுள்ளார். ‘லைலா என பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு தனது அரவணைப்பை வழங்குவதாக டெய்லர் ஸ்விப்ட் கூறியிருந்தார். அவரது நிதி உதவி குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் அந்த குழந்தையின் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *