பிரபல ராப் பாடகரை கைது செய்ய லுக் அவுட் நோட்டீஸ்

கொச்சி,
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன். இவர் மீது எர்ணாகுளத்தை சேர்ந்த பெண் டாக்டர் திருக்காக்கரா போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் புகார் அளித்து இருந்தார். அதில், சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான எங்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.
அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்து விட்டு, கோழிக்கோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆசைவார்த்தை கூறி என்னை பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இதையடுத்து திருமணம் செய்வதில் இருந்து பின் வாங்கினார். எனக்கு ஏற்பட்ட அநீதியை பொறுக்க முடியாமல் புகார் அளித்து உள்ளேன் என்று கூறப்பட்டு இருந்தது.
அதன் பேரில் போலீசார் வேடன் மீது பாலியல் அத்துமீறல் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அவர் தலைமறைவாகி விட்டார். வேடனை கைது செய்யவும், வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்கவும் திருக்காக்கரா போலீஸ் துணை கமிஷனர் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளார். மேலும் முன் ஜாமீன் கேட்டு வேடன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு வருகிற 18-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.