பிரபல நடிகருக்கு புற்றுநோய்… நாட்கள் எண்ணப்படுவதாக உருக்கம்

சென்னை,
மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர் ஷிகான் ஹுசைனி. கராத்தே மாஸ்டரான இவர் பல நடிகர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்துள்ளார். இவர் கே.பாலசந்தர் மூலம் ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் அறிமுகமானார். வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை என சில படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். மேலும் ரஜினிகாந்த் நடித்த ப்ளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்திலும் ஹுசைனி வேலை செய்திருக்கிறார். விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். அதில் விஜய்க்கு உடற்பயிற்சி பயிற்சியாளராக நடித்திருந்தார்.
நடிகர்கள் மட்டுமின்றி வெகுஜன மக்களுக்கும் அவர் தனது கராத்தே பயிற்சி அளித்துள்ளார். மேலும் பலருக்கு வில் வித்தை பயிற்சியையும் அவர் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சின்னத்திரையில் தோன்றியும் அவர் கராத்தே பயிற்சியளித்துள்ளார்.
இந்நிலையில் ரத்த புற்றுநோய் வந்திருப்பதாக அவர் கூறியிருப்பது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுகுறித்து ஷிகான் ஹுசைனி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “எனக்கு ரத்த புற்றுநோய் வந்திருக்கிறது. இதற்கு மொத்தம் மூன்று காரணங்கள் சொல்கிறார்கள். அதாவது என்னுடைய ஜெனட்டிக் பிரச்னையால் வந்திருக்கலாம் அல்லது ஏதேனும் வைரஸால் வந்திருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு ஷாக்கினால் வந்திருக்கலாம் என்று சொன்னார்கள். நான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் வேண்டும். நான் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன். எனக்கு மன தைரியம் அதிகம். நான் கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தை விற்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். பவன் கல்யாண் இங்கு வந்துதான் கராத்தே கற்றுக்கொண்டு சென்றார். எனவே அவர் இந்த இடத்தை வாங்கிக்கொள்ள வேண்டும். அதேபோல் விஜய்க்கு ஒரு கோரிக்கை. அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும்” என்றார்.