பிரதீப் ரங்கநாதனின் “எல்.ஐ.கே” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தினை தயாரித்துள்ளன.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பேன்டஸி காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
‘எல்ஐகே’ திரைப்படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், அதே நாளில் ‘டூட்’ திரைப்படமும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு படங்களையும் வெவ்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்ததால் தீபாவளி வெளியீட்டில் எந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், ‘டூட்’ திரைப்படம் அக்டோபர் 17 ம் தேதி வெளியாவது உறுதியானதால் ‘எல்ஐகே’ திரைப்படத்தை ஒத்திவைத்துள்ளனர்
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடித்த இரு படங்கள் தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில் ‘டூட்’ படத்திற்கு வழிவிட்டு, வரும் டிசம்பரில் ‘எல்ஐகே’ படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “இரண்டு ரயில்கள் ஒரே பாதையில், எதிரெதிர் திசையில் வேகமாக பாய்ந்து வந்தால், அது பேராபத்தில் தான் முடியும். எனவே அதை தவிர்க்கும் பொருட்டு,மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கீர்த்திஸ்வரன் அறிமுகமாகும் ‘டூட்’ படத்துக்கு வழிவிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் ஹீரோ பிரதிப் ரங்கநாதனுக்கு இந்த தீபாவளி மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைய வாழ்த்துகிறோம்.
எங்கள் படத்துக்கு வழிவிட்டு வேறொரு தேதியில் ‘டூட்’ படத்தை ரிலீஸ் செய்யச்சொல்லி மைத்ரி மூவிஸ் நிறுவனத்திடம் பலமுறை வேண்டுகோள் வைத்தும் அது பலனளிக்கவில்லை. மேலும், தற்போது திரைப்படத்துறை மற்றும் திரையரங்குகள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, இரண்டு படங்களின் வசூலுக்கும் ஏந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம்.
எனவே அன்பின் அடையாளமாக, எங்கள் திரைப்படத்தை 2025 டிசம்பர் 18ம் தேதி வியாழக்கிழமை அன்று வெளியிட முடிவு செய்துள்ளோம். எங்கள் டீசருக்கு கொடுத்த மாபெரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதே ஆர்வத்துடன் படம் வெளியாகும் வரை காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். வரும் வாரங்களில் படம் குறித்த பல புதிய அப்டேட்கள், பாடல்கள் உங்களைத் தேடி வரவிருக்கின்றன.” என்று தெரிவித்துள்ளது.