பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன்

பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன்


ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஜீட் வின், பரிமேட்ச், லோட்டஸ் 365 உள்ளிட்ட சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, குறிப்பிட்ட சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் திரைப் பிரபலங்கள் நடித்திருப்பது தெரியவந்தது. பிரபல நடிகர்கள் விளம்பரத்தில் நடித்ததை நம்பி, சூதாட்ட செயலிகளை பயன்படுத்தி 3 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்ததாக ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரபல நடிகர்களான பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உட்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை சமீபத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவதற்கு ஈடாக பெரும் அளவிலான கமிஷன் தொகை பிரபலங்கள் பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஐதராபாத் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபலங்களின் வங்கி பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகின்றது.

நாடு முழுவதும் சூதாட்ட செயலியால் பணத்தை இழந்து, பலர் சிக்கலில் தவித்து வருகின்றனர். ஒரு சிலர் அதிக கடன் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இதனால் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் தருவதையும், ஊக்கப்படுத்துவதையும் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டவிரோத சூதாட்டம் செயலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. ஆன்லைன் மூலம் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி வரும் 30ம் தேதி ஆஜராக சொல்லி பிரகாஷ் ராஜிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதேப்போல் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு நாளை குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *