பிக்பாஸ் மலையாளம் – தன்பால் ஈர்ப்பாளர் பற்றி இழிவுப் பேச்சு: மோகன்லால் கண்டனம்

திருவனந்தபுரம்,
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்பால் ஈர்ப்பு இணையரை இழிவாக பேசிய போட்டியாளர் வேத்லட்சுமிக்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளரான மோகன்லால் கண்டனம் தெரிவித்தார்.
இந்த ஆண்டு தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்தில் துவங்கி இருக்கிறது. இதில் தற்போது மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வார எபிசோட் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மலையாள பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி துவங்கியது. இதில், ஆதிலா மற்றும் நூரா ஆகிய பெண் ஒருபாலின தம்பதி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளார்கள். இவர்களுடன் வைல்டு கார்டு சுற்றில் வேத்லட்சுமி மற்றும் மஸ்தானி என்கிற இரு பெண் போட்டியாளர்கள் இணைந்தார்கள்.
லட்சுமி மற்றும் மஸ்தானி பிக்பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன்பு வரை ஆதிலா மற்றும் நூரா மற்ற போட்டியாளர்களுடன் சகஜமாக பழகி வந்தனர். ஆனால் லட்சுமியும் மஸ்தானியும் உள்ளே நுழைந்த நாளில் இருந்து அவர்கள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து பேசி வந்தார்கள்.
குறிப்பாக லட்சுமி இவர்களைப் போன்றவர்களை தான் வீட்டிற்குள் கூட விடமாட்டேன் என்று சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கடந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சியில் லட்சுமியின் கருத்திற்கு மோகன்லால் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.
“ஒரு பாலின ஜோடிகளுக்கான அங்கீகாரத்தை நீதிமன்றமே வழங்கி இருக்கிறது. ஆதிலா மற்றும் நூரா இருவரும் எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டிருக்கிறார்கள். இப்படி இருவர் இந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு அதை ஒப்புக்கொண்டு தானே இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள். பின் எப்படி உங்களால் சக மனிதரை தரக்குறைவாக பேச முடிந்தது. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்கு இங்கே இவர்களுடன் இருக்க விருப்பமில்லை என்றால் தாராளமாக வெளியேறலாம்” என்றார்.