பாலிவுட் சினிமாவில் நடிகைகளுக்கு ‘கவனிப்பு' கிடையாது- கீர்த்தி சனோன் வேதனை

மும்பை,
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர், கீர்த்தி சனோன். ‘ஹவுஸ்புல்-4’, ‘ஆதிபுருஷ்’, ‘க்ரு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் கீர்த்தி சனோன், 2021-ம் ஆண்டில் வெளியான ‘மிமி’ படத்துக்கு தேசிய விருது பெற்றார். இதுதவிர தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார்.
இதற்கிடையில் பாலிவுட் சினிமாவில் ஆணாதிக்கம் மேலோங்கி கிடப்பதாக கீர்த்தி சனோன் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ”பாலிவுட் சினிமாவில் நடிகர்களின் ராஜ்ஜியம் தான் நடக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் வருவதற்காக நடிகைகளும் அதிகாலை முதலே காத்திருக்கிறோம். இங்கு சமநிலை என்பதே கிடையாது. அதற்கு வாய்ப்பும் இல்லை.
நடிகர்களுக்கு அட்டகாசமான அறைகளையும், சொகுசு கார்களையும் படக்குழுவினர் ஏற்படுத்தி தருவார்கள். விழுந்து விழுந்து கவனிப்பார்கள். ஆனால் நடிகைகளை அப்படி கண்டுகொள்வதில்லை. சிறிய அறைகளையும், சாதாரண கார்களையும் தருவார்கள். இது மாறவேண்டும். இது நடிகைகளின் மனதில் கொந்தளிப்பாகவே இருக்கிறது”, என்றார்.






