பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி ?

பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் போன்ற நடிகைகள் ஹாலிவுட்டில் நடித்து வருகின்றனர். பாலிவுட்டில் மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் ஒன்று தயாரிக்கப்பட இருக்கிறது. இப்படத்தை சர்வதேச தரத்திற்குக் கொண்டு செல்ல அத்தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் ஹாலிவுட் நடிகை ஒருவர் ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று அந்நிறுவனம் கருதி அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஹாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை சிட்னி ஸ்வீனியை இப்படத்தில் நடிக்க வைக்க பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் திட்டமிட்டு இருக்கிறார்.
நியூயார்க், லண்டன், பாரிஸ், துபாய் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். சிட்னி ஸ்வீனியின் உலகளாவிய பிரபலத்தால், பாலிவுட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக இந்தப் படத்தை எடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கிறது.
இதற்காக சிட்னி ஸ்வீனியிடம் தயாரிப்பாளர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தங்களது படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக படத்தில் நடிக்க ரூ.530 கோடி சம்பளமாகத் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதனைக் கேட்டு சிட்னி ஸ்வீனி உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வில்லை. அவருக்கு ஏற்கனவே ஹாலிவுட்டில் வரிசையாக படங்கள் இருக்கின்றன. எனவே பாலிவுட் படத்தில் நடிப்பதா வேண்டாமா என்பது குறித்து சிட்னி ஸ்வீனி பரிசீலித்து வருகிறார். சிட்னி ஸ்வீனி டிவி சீரியஸான யூபோரியாவில் நடித்து புகழ் பெற்றவர். தற்போது அவர் நடித்துள்ள ஹவுஸ்மெய்டு படம் விரைவில் வெளியாக இருக்கிறது.