பாடல்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேண்டாமே.. இசையமைப்பாளர் ரகு வேண்டுகோள்

சென்னை,
‘அம்மா அம்மம்மா’, ‘தரிசு நிலம்’, ‘மிஸ்டு கால்’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.வி.எம்.ரகு. தற்போது இளம் தலைமுறையினருக்கு இசைக்குறிப்புகளை பயிற்றுவித்து வரும் ரகு, திரைப்பட பாடல்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, சமீப காலமாக திரைப்படப் பாடல்கள் மக்கள் மனதில் நிலைத்து நிற்பதில்லை. அப்படி இருக்கையில் தற்போது செயற்கை நுண்ணறிவு என்ற ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது, திரைப்பட பாடல்களின் தரம் மிகவும் குறைந்துவிடுகிறது. அப்படி உருவாகும் பாடல்களில் ஜீவன் முற்றிலும் இழந்த நிலையில் உள்ளதால், மக்கள் மனங்களில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.
கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர்-கணேஷ், கங்கை அமரன் போன்ற மாபெரும் இசையமைப்பாளர்களின் கைவண்ணங்களில் உருவான பாடல்கள் எல்லாம் எக்காலத்திலும் உயிர்ப்புடன் விளங்குகிறது என்றால், அவர்கள் அனைவரும் தங்களது சொந்தமான திறமையாலும், தனித்தன்மையாலும் உருவாக்கப்பட்டதால் தான் காலம் கடந்தும் பேசப்படுகிறது.
அதனால், இப்போதுள்ள இசையமைப்பாளர்கள், தயவுசெய்து ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு பயன்படுத்தும்போது மூளை மங்கி விடுகிறது. தங்களது சொந்த கற்பனையில் மெட்டமைத்து பாராட்டை அள்ளுங்கள்”, என்றார்.