பாகுபலிக்கு பிறகு எனது கதை தேர்வில் இன்னும் அதிக கவனம் செலுத்துகிறேன்- அனுஷ்கா | After Baahubali, I am paying more attention to my story selection

பாகுபலி, அருந்ததி படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகை அனுஷ்கா. அவரது நடிப்பில் ‘காதி’ என்ற படம் இன்று வெளியாகிறது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். போதைப்பொருள் கடத்தலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் அனுஷ்கா வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருப்பார்.
இந்நிலையில் அனுஷ்கா அளித்த பேட்டியில் கூறியதாவது:- சூட்டிங் ஆரம்பிக்கும் முதல் வாரத்தில் எனக்கு பதட்டமாக இருக்கும். அதை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. பொதுவாக ஒரு வாரம் கழித்து நன்றாக இருக்கும். அதேபோல் ரிலீசுக்கு முன்னும், பின்னும் எனக்கு ரொம்ப பயமாக இருக்கும். போக போக சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் இப்போதும் அந்த பயம் அப்படியேதான் இருக்கிறது.
ஒரு நடிகையாக எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுவேன். இயக்குனர் கிரிஷ் எனக்கு மிகச்சிறந்த கதாபாத்திரங்களை கொடுத்து இருக்கிறார். காதி படக்கதையை என்னிடம் சொன்ன போது இது எனக்கு கிடைக்கும் என்று நான் ஒரு போதும் நினைக்கவில்லை. இந்த கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று அவர் ஊக்கப்படுத்தினார். பொதுவாக கதை என்னை உற்சாகப்படுத்த வேண்டும். பெண்களை மையமாக கொண்ட படம், பெண் கதை நாயகியாக நடிப்பது போன்ற கதைகள் பற்றியது அல்ல. பாகுபலிக்கு பிறகு எனது கதை தேர்வில் இன்னும் அதிக கவனம் செலுத்துகிறேன்.
கதையை நான் விரும்பி படமாக்குவதை ரசிக்க வேண்டும். வருடங்கள் செல்லச் செல்ல, என் வேலையை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறேன் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஒரு படத்திற்கு 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை செலவிடுகிறேன் என்றால், அது என் வாழ்க்கையின் ஒரு வருடமாகும், அதை நான் ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. எனவே, நான் நல்ல கதைகளை மெதுவாக தேர்வு செய்ய விரும்புகிறேன்.
நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே, தனிமையில் இருப்பதையே விரும்புவேன். நான் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இல்லை. ஒவ்வொரு நாளும் அதில் என்ன சொல்லிக்கொண்டிருப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என் வாழ்க்கை மிகவும் எளிமையானது மற்றும் சலிப்பானது. ஆனால் அடுத்த தலைமுறை சமூக ஊடகங்களில் மூழ்கி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.