‘பராசக்தி’ திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

‘பராசக்தி’ திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு



சென்னை,

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கில், கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து ஜனவரி 2 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10 ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 1965ம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போரை மையமாக வைத்து, செம்மொழி என்ற பெயரில் கதையாக எழுதி, 2010 ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெண் சிங்கம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது, செம்மொழி படத்தின் கதையை கலைஞரிடம் கூறியதாகவும், மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொல்லியிருப்பதால், கதையை எழுதும்படி கூறி தனக்கு பாராட்டு தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கட்ச்ந்த 2010 ம் ஆண்டு பதிவு செய்த இந்த கதையை, பல தயாரிப்பாளர்களிடம் கொடுத்ததாகவும், தயாரிப்பாளர் சேலம் தனசேகரன், தனது கதையை நடிகர் சூர்யாவிடம் கொடுக்க, அவர் அதை இயக்குனர் சுதா கொங்கராவிடம் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

பின்னர், புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட படம், தனது செம்மொழி கதை எனவும், கைவிடப்பட்ட அந்த படம், தற்போது, பராசக்தி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

தனது கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 2025 ம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், பராசக்தி படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். செம்மொழி கதையையும், பராசக்தி கதையையும் ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இரு கதைகளும் ஒன்று தானா? இல்லையா? என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி, மனுவுக்கு ஜனவரி 2 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, பராசக்தி பட இயக்குனர் சுதா கொங்கரா, தயாரிப்பாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மேலும், மனுதாரரின் புகார் மீது அனைத்து தரப்பினரையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *