பண மோசடி புகார் – இசையமைப்பாளர் சாம் சி.எஸ். விளக்கம், Money laundering complaint

பண மோசடி புகார் – இசையமைப்பாளர் சாம் சி.எஸ். விளக்கம், Money laundering complaint


சென்னை

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் மோசடி புகார் அளித்துள்ளார். “தமிழ் பையன் இந்தி பொண்ணு” என்ற படத்துக்கு இசையமைக்க ரூ.25 லட்சம் பெற்று ஏமாற்றியதாக குற்றம் சாட்டி கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், “கடந்த 2021-ம் ஆண்டு தமிழ் பையன் இந்தி பொண்ணு என்ற படத்துக்கு இசை அமைப்பதற்காக இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.-க்கு ரூ.25 லட்சம் முன்பணம் கொடுத்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் அப்படத்தின் பணிகள் பாதியிலேயே நின்றது. தற்போது அப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. ஆனால் இப்படத்திற்கு இசை அமைக்காமலும் கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் சாம் சி.எஸ் ஏமாற்றி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த புகார் தொடர்பாக இசையமைப்பாளர் சாம் சி.எஸ். விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ என்ற படத்துக்கு இசையமைக்க என்னை தயாரிப்பாளர் சமீர் அலிகான் ஒப்பந்தம் செய்தார். சில ஆண்டுகள் தொடர்பில்லாமல் இருந்த சமீர், திடீரென முழுப் படத்தையும் முடித்து விட்டதாக சொல்லி இசையமைக்க கோரினார். முன்பு ஒப்பந்தம் செய்த படங்களின் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், காலதாமதம் ஆகும் என்ற நிலவரத்தை கூறினேன்.

காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு கோவை காவல் நிலையத்தில் என் மீது சமீர் புகார் அளித்துள்ளார். அப்போதே விளக்கத்தை உரிய ஆதாரங்களுடன் போலீசாரிடம் அளித்தேன். அடுத்தகட்டமாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். பேச்சுவார்த்தை நடந்தது. வாங்கிய முன்பணத்தை திருப்பிக்கொடுக்க முடிவு செய்தேன். யோசித்து சொல்வதாக சமீர் சொன்னார்.

இப்போது திடீரென என் மீது சமீர் மீண்டும் புகார் அளித்துள்ளார். அவர் காழ்ப்புணர்ச்சி காரணமாக தவறான வழியில் என்னிடமிருந்து பணம் பறிக்க சதித்திட்டம் தீட்டியுள்ளார். இதுவரை புகார் குறி்த்து காவல் நிலையத்திலிருந்து எனக்கு அழைப்பாணை எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *