பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக புகார்… விஷால் பட நடிகை மீது வழக்கு

ஐதராபாத்,
நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டிம்பிள் ஹயாதி. தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வரும் டிம்பிள் ஹயாதி, தனது கணவர் டேவிட்டுடன் ஐதராபாத் உள்ள ஷேக்பேட் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இவரது வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த 22 வயது இளம்பெண், காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், நடிகை டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த கொடுமைக்கு உள்ளாக்கியதாக தெரிவித்துள்ளார்.
அந்த பணிப்பெண் கடந்த செப்டம்பர் 22-ந்தேதி டிம்பிள் ஹயாதியின் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால், நடிகையும் அவரது கணவரும் தனக்கு சரியாக உணவு கூட தராமல், அவமானப்படுத்தும் வகையில் கொச்சையான வார்த்தைகளை பேசி, சித்ரவதை செய்ததாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், “நாங்கள் அணியும் செருப்புக்கு கூட நீ ஈடாக மாட்டாய்” என்று அவர்கள் கூறியதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை காலை பணிப்பெண்ணுக்கும், டிம்பிள் ஹயாதியின் கணவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட மோதலில் பணிப்பெண்ணின் ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு நடந்த மோதலை அந்த பணிப்பெண் வீடியோ எடுக்க முயன்றபோது, அவரது போனை பிடுங்கி அவர்கள் உடைத்துப் போட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணிப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் டேவிட் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.