"படை தலைவன்" சினிமா விமர்சனம்

யானை பயிற்றுவிப்பாளரான சண்முக பாண்டியன், ஒரு யானையை குட்டியிலிருந்து வளர்த்து வருகிறார். ‘மானியன்’ என்று பெயர் சூட்டப்பட்ட அந்த யானையை தன் பிள்ளையாக பாவித்து வளர்க்கிறார். இதற்கிடையில் ஊருக்குள் புதிதாக வரும் ஒரு கூட்டம், யானையை திருடிக் கொண்டு காட்டுக்குள் சென்று மறைகிறார்கள். இதற்கு சண்முக பாண்டியன் உறவினரும் துணை போகிறார். யானையை காணாமல் தவிக்கும் சண்முக பாண்டியன், தனது நண்பர்களுடன் யானையை தேடி காட்டுக்குள் செல்கிறார். இந்த பயணத்தில் பல்வேறு இடையூறுகளையும், சவால்களையும் அவர் எதிர்கொள்கிறார்.
அதேவேளை காட்டுக்குள் வன தேவதையை வழிபடும் மக்களை ஒரு கும்பல் மிரட்டி அடிபணிய வைத்திருப்பதை அறிகிறார். சுதந்திரம் இல்லாமல் துயரோடு வாழும் அந்த மக்களுக்கு அவர் விடுதலை பெற்று தந்தாரா? மகனாக கருதி வளர்த்த யானையை கண்டுபிடித்தாரா? கொள்ளை கூட்டம் யானையை திருடி சென்றது ஏன்? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
கோபம், ஆக்ரோஷம், அதிரடியில் விஜயகாந்தை அப்படியே உரித்து வைத்தார் போல, களமிறங்கி அசத்தியிருக்கிறார் சண்முக பாண்டியன். முந்தைய படங்களை ஒப்பிடும்போது அவரது நடிப்பு மெருகேறி இருக்கிறது. யானையுடனான பாச காட்சிகள் புல்லரிக்க வைக்கிறது.
யாமினி சந்தர் அழகான கதாநாயகியாக மனதில் இடம் பெறுகிறார். இன்னும் அவரை பயன்படுத்தி இருக்கலாம். வில்லனாக வரும் கருடன் ராம், மிரட்டல் நடிப்பால் கவனிக்க வைக்கிறார். ரிஷி ரித்விக் உள்ளிட்டோரின் நடிப்பும் பேச வைக்கிறது. முனிஷ்காந்த், வெங்கடேஷ், அருள் தாஸ், ஸ்ரீஜித் ரவி உள்ளிட்டோரம் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஏ ஐ தொழில்நுட்பத்தில் இடம்பெறும் விஜயகாந்த் ஓரிரு காட்சிகளே வந்தாலும் சிலிர்க்க வைக்கிறார். அவருடன் வரும் யோகி பஞ்ச் வசனங்கள் பேசி ‘ரமணா’ படத்தை நினைவூட்டுகிறார்.
எஸ் ஆர் சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது யானைகள் வரும் காட்சிகள், அடர்ந்த காடுகளில் நடக்கும் சண்டைக் காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது. இளையராஜாவின் இசை வருடுகிறது. பின்னணி இசையும் சுகம்.
பரபரப்பான திரைக்கதை பலம். பல இடங்களில் லாஜிக் மீறல்கள் எட்டிப் பார்ப்பது பலவீனம். ஏற்கனவே பழக்கப்பட்ட கதைக்களம் என்றாலும், அதில் புதுமையான விஷயங்களை புகுத்தி, பரபரப்பும், விறுவிறுப்பான படைப்பை கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார், இயக்குனர் யு.அன்பு. கிளைமேக்ஸ் சண்டை காட்சி அசர வைக்கிறது.
படைத்தலைவன் – நம்பிக்கை