‘படுக்கை அறையில் நிகழ்ந்த அமானுஷ்யம்’ – திகில் அனுபவத்தை பகிர்ந்த பாலிவுட் நடிகை | ‘Paranormal Incident in the bedroom’

மும்பை,
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனாக்சி சின்கா. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தபாங்’ படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து வரும் சோனாக்சி சின்கா, சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘ஹீராமண்டி’ வெப் தொடரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், சோனாக்சி சின்கா அடுத்ததாக ‘நிக்கிதா ராய்’ என்ற திகில் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், தனிப்பட்ட முறையில் தனக்கு நேர்ந்த அமானுஷ்ய அனுபவம் குறித்து சோனாக்சி சின்கா பேசியுள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது;-
“எனது சொந்த வீட்டில் எனக்கு ஒரு திகில் அனுபவம் நடந்தது. முன்பு பேய்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் ஒரு அமானுஷ்ய சம்பவம் எனது நம்பிக்கையை உலுக்கியது. ஒருநாள் அதிகாலை 4 மணியளவில் நான் எனது படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது எனது அறையில் யாரோ இருப்பது போல் உணர்ந்தேன்.
அந்த நேரத்தில் நான் தூக்கத்திற்கும், விழிப்புக்கும் இடையிலான நிலையில் இருந்தேன். திடீரென்று யாரோ என்னை எழுப்புவது போல் இருந்தது. யாரோ என் மீது அமர்ந்திருப்பது போல் ஒரு விசித்திரமான அழுத்தத்தை உணர்ந்தேன். நான் பயத்தில் கண்களைத் திறக்கவில்லை. என்னால் அசையக்கூட முடியவில்லை.
அதிகாலை வரை அதே நிலையில்தான் இருந்தேன். அந்த சம்பவம் என்னை மிகவும் பயமுறுத்தியது. எனது நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியது. மறுநாள் இரவு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் எனது படுக்கை அறைக்கு சென்றேன். அங்கு சென்று, ‘நேற்று இரவு யார் வந்திருந்தாலும் சரி, தயவுசெய்து மீண்டும் இதுபோல் செய்ய வேண்டாம்’ என்று கூறினேன்.
ஆச்சரியப்படும் விதமாக, அதற்குப் பிறகு மீண்டும் அதுபோன்ற அமானுஷ்ய அனுபவம் எதுவும் ஏற்படவில்லை. ஒருவேளை அந்த பேய் நான் சொன்னதை கேட்டிருக்கலாம், அல்லது அது ஒரு நல்ல பேயாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.”
இவ்வாறு சோனாக்சி சின்கா தெரிவித்துள்ளார்.