‘படவா’ படம் எப்படி இருக்கிறது? – விமர்சனம் | How is the movie ‘Badavaa’?

‘படவா’ படம் எப்படி இருக்கிறது? – விமர்சனம் | How is the movie ‘Badavaa’?


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விமல் மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘படவா’. இப்படத்தை கே.வி நந்தா இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஜான் பீட்டர் இத்திரைப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார். விவசாயம் பற்றி பேசும் சமூக பொறுப்புள்ள படமாக ‘படவா’ உருவாகியுள்ளது.

இந்த நிலையில், விமல் நடித்த ‘படவா’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

கிராமத்தில் வெட்டியாக ஊர் சுற்றும் விமலும் சூரியும் கிடைக்கும் பொருட்களையெல்லாம் திருடி விற்று ஊராருக்கு தொந்தரவாக இருக்கின்றனர். இவர்களின் தொல்லைகள் எல்லை மீற கிராமத்து மக்கள் ஒன்று சேர்ந்து பணம் வசூலித்து விமலை மலேசியாவுக்கு அனுப்பி வைத்து விட்டு நிம்மதியாகிறார்கள்.

மலேசியாவில் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் விமல் சூதாட்டத்தில் விடுகிறார். ஒரு கட்டத்தில் அவரது வேலையும் பறிபோக ஊருக்கு திரும்புகிறார். அப்போது கிராமத்தினர் வெறுப்பு காட்டாமல் விமலை மாலை மரியாதையோடு வரவேற்பதுடன் தலைவராகவும் தேர்வு செய்கிறார்கள். விமலுக்கு மரியாதை கிடைக்க காரணம் என்ன? அவரிடம் மன மாற்றம் ஏற்பட்டதா? என்பது மீதி கதை.

விமல் துறுதுறுவென வருகிறார். பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை தடுத்து கிட்டிப்புள்ளு, பம்பரம் விளையாட வைப்பது, சகோதரி வாங்கிய மீனை திருடி மாமாவிடம் விற்பது, ஊரார் தூக்கத்தை பட்டாசு வெடித்து கலைத்து சந்தோஷப்படுவது, வில்லனுடன் மோதுவது என்று கமர்ஷியல் காமெடி ஹீரோ வேலைகளை கச்சிதமாக செய்து இருக்கிறார். கருவேல மரங்களால் விவசாயம் அழியும் நிலைக்கு எதிராக அவர் எடுக்கும் நடவடிக்கைகள் கதாபாத்திரத்துக்கு மேலும் வலுசேர்க்கிறது.

சூரியின் நகைச்சுவை படத்துக்கு பலம். விமலுடன் இணைந்து அவர் செய்யும் ரகளை சிரிப்பு வெடி. நாயகி ஷ்ரிதா ராவ் கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். செங்கல் சூளை அதிபராக வரும் கேஜிஎப் ராம் வில்லத்தனம் மிரட்டல். தேவதர்ஷினி, ராமர், நமோ நாராயணன் ஆகியோரும் கதாபாத்திரங்களில் நிறைவு.

நீளமான காட்சிகள் படத்துக்கு தொய்வை கொடுப்பது பலவீனம். ஜான்பீட்டர் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன. ராமலிங்கத்தின் கேமரா கிராமத்து வாழ்வியலை நுணுக்கமாக படம்பிடித்துள்ளது. கருவேல மரங்களால் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகளை காதல், காமெடி கலந்து சுவாரஸ்யமாகவும், ரசிக்கும்படியும் அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கே.வி.நந்தா.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *